இறைவர் : அருள்மிகு ஸ்ரீ பார்வதீஸ்வரர் ஸ்வாமி
இறைவி :ஶ்ரீ சொர்ணாம்பிகை அம்பாள்
தல மரம் :வன்னி மரம்
தீர்த்தம் : திருசூலகங்கை தீர்த்தம்
Arulmigu Sournapureeswarar Swamy Temple, Thirukaduvaaikarai puthur | அருள்மிகு சொர்ணாம்பிகை அம்பாள் சமேத அருள்மிகு சொர்ணபுரீசுவரர் சுவாமி திருக்கோயில்- திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் தல வரலாறு
குடமுருட்டியாற்றின் கரையில் உள்ள தலம். குடமுருட்டி ஆறு தேவார காலத்தில் கடுவாய் எனப் பெயர் பெற்றிருந்தது. ஊரின் பெயர் புத்தூர். கடுவாய் நதிக்கரையில் இருந்ததால் கடுவாய்க்கரைப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. இந்நாளில் இத்தலம் ஆண்டாங்கோவில் என்ற பெயருடன் அறியப்படுகிறது. ஆலயத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளிக்கிறது. ஆலயத்திற்கு வெளியே கோவிலின் தீர்த்தம் - திரிசூல கங்கை கோயிலின் வலப்புறம் உள்ளது. கோபுர வாயிலில் இடதுபுறம் சித்தி விநாயகர் உள்ளார். கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் நேரே கோடிமரத்து விநாயகர், கொடிமரம், பலிபீடம் மற்றும நந்தி மண்டபம் உள்ளன. நந்தி மண்டப தூண்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம். அதையடுத்து அநேக தூணகளுடைய கருங்கல்லால் ஆன முன் மண்டபம் உள்ளது. உள்ளே சென்று கருவறையை அடைந்தால் மூலவர் கிழக்கு நோக்கு எழுந்தருளியுள்ளார். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்
ஆண்டு தோறும் சித்திரை 11,12,23 தேதிகளில் சூரிய ஒளி மூலஸ்தானத்தில் விழுந்து சூரிய பூஜை நடக்கிறது. கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி ஆலால மரத்தின் கீழ் சனகாதி முனிவர்கள் இருபுறமும் இருக்க, முயலகனை காலின் கீழ் மிதித்தவாறு காணப்படுகிறார். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் நால்வர் சந்நிதி, பைரவர், சூரியன், நவக்கிரகங்கள் ஆகியவற்றைக் காணலாம். காக வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் சனி பகவானின் திருஉருவச்சிலை அழகாக உள்ளது. அம்பாள் சொர்ணாம்பிகை தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள்.அம்பாள் சந்நிதி முன் மண்டபத்தின் மேல் விதானத்தில் 12 ராசிகளும் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன. இத்தல விநாயகர் கும்பகர்ண விநாயகர் என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல இறைவனை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் எனபது ஐதீகம். சரியான வயதில் வயதுக்கு வராத பெண் குழந்தைகள் திங்கள் கிழமையில் இத்தலத்தில் நீராடி, இறைவனுக்கு விளக்கேற்றி அர்ச்சித்து, இறைவி சொர்ணாம்பிகையையும் வழிபட்டு வந்தால் விரைவில் ருது ஆகிவிடுவார்கள் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை. திருநாவுக்கரசு சுவாமிகள் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அப்பர் தனது பதிகத்தில் இத்தலத்தை "கடுவாய்க்கரைத் தென்புத்தூர்" என்று குறிப்பிடுகிறார்.
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு ஸ்ரீ சொர்ணபுரீசுவரர் திருக்கோயில் ஆண்டான்கோவில் ஆண்டான்கோவில் அஞ்சல் வலங்கைமான் S.O. திருவாரூர் மாவட்டம் PIN - 612804
திருக்கோயில் திறக்கும் நேரம்:
இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஆலயம் அமைவிடம்:
கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழியாக குடவாசல் செல்லும் வழியில் வலங்கைமானில் இருந்து கிழக்கே சுமார் 3 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுமார் 12 கி.மி. தொலைவு. கும்பகோணத்தில் இருந்து நரசிங்கமங்கலம் செல்லும் நகரப் பேருந்து எண் A20 கோவில் வழியாகச் செல்கிறது. தஞ்சாவூரில் இருந்து வலங்கைமான் வழியாக திருவாரூர் செல்லும் பேருந்துகள் ஆண்டான்கோவில் வழியாகச் செல்கின்றன். ஆண்டான்கோவில் நிறுத்தத்தில் இறங்கி சுமார் அரை கி.மி. நடந்தால் சொர்ணபுரீசுவரர் ஆலயத்தை அடையலாம்.